Wednesday, November 18, 2009

நேயத்தின் திரவங்கள்

உவந்து வழங்கப் பெறுவதான

ஒரு முத்தம்

மடிசாய்ந்து கிடக்கையில் நெற்றில் சொட்டும்

துளிக் கண்ணீர்

தோள்  சாய்கையில் காதுமடல்களில் தடவிக் கொள்கிற

உச்சி வகிட்டு எண்ணெய்

உன் உள்ளங்கையை கன்னத்திற்கு கொடுத்து

உறங்கும் மதியத்தூக்கம் கை வியர்வை

நேயத்தின் திரவங்கள் கூடலை கடந்தும்

உயிர் வளர்ப்பன (1994 )

Tuesday, November 17, 2009

நேய விருப்பம்

கடல் திமிரும் கார்காலத்தின் முதிர் அந்தியில்
கைவிலக்கிப் பிறந்த காற்றாடி முத்தங்களில்
கோடை வியர்வை துளிர்க்க கேட்டேன்

கருப்பு முத்து மச்சத்தில்
கழுவிய திராட்சை வண்ணத்தில்
குவிந்த வைர பாகத்தில்
திரண்ட நாவற் கனி பிளந்த உதடுகள்
படிந்துவக்கும் காலம் எது ?

மிளா ஆடுகள் மிக மேயும்
விழா நாளின் ஆடையுடன்
இளவேனில் வனம் கூவும்
வளம் பாடும் பறவை சூழ
கந்தர்வ மணம் புரிந்து என் நன்கர்வம் அழி
என்றாள்

பின்னேழ் பிறகேழ் மீதெனக்கு
நன்னம்பிக்கை முனை வளர்க்க
இன்னும் இல்லையடி பொறுமை
இன்றே இப்போதே வன்காதல் நிறுவு

சின்னம் இட்டு பின்னம் குறிக்கும்
இன்னரும் நாள் பார்த்து கன்னம் தின்
சொன்னசொல் வண்ணம் மாறாது
செந்நீர் தோல் அருகே பாயும் பாகம் உனது


செல்லப் பெண்டாட்டி சீவன் இற்று
மெல்லப் பிணி இளக்கும் கனியாகும்
உள்ளம் ,முகர முகம் வாடும் மலர் அல்ல
வெள்ளம் கரையறுத்த கதை அறிந்தால் சொல்

தீத் தின்னும் யாக்கைக்குள் அவா மென்று
காத்திருப்பின் வலி வளர்க்குது என்னுள்ளும்
சாத்திரம் மீதெனக்கு நம்பிக்கையில்லை
ஆத்திரம் வேண்டாம் பார்த்திருந்து செல் செல்லாய்
தீதற செதுக்கிய தகப்பன் முகம் கருக்க
ஓரடி உடல் நகராது! கற்ற கல்வி உற்ற தாய்
பேரிடி பெய்து புலம் நகரும் மழை என
நீரடி நகரும் மீனென கண்மறைய நானல்ல பதர்
போரிட்டு ரேகை பிணைய கரம் தருவேன்
தேர் கவிழ கச்சவிழ்த்து இச்சைத்தீர்த்து போக நானல்ல இணை

கதி யறிந்தும் கற்பு காக்கும் காதலே நீ
விதியெழுதும் தேவதை. விக்கிச் சாவதும்
நதி அணை திக்கி பாய்வதும் காதலின் வேர் வழி
மதி முகம் பார்த்தபடி மடிசாய்வதும் தவந்தான் தா வரம்